30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த மனைவி.

கோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து கணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை அதன் உரிமையாளரிடம் மனைவி திரும்ப ஒப்படைத்தார்.

கோட்டக்குப்பம் அமிர்தா கார்டனை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் துபாயில் வேலை செய்து வருவதால், இவரது மனைவி நசீமா (வயது 53) தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு நசீமா தனது தாயாருடன் வெளியில் சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நசீமா கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அப்போது நசீமா வீட்டில் திருடியது சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே அர்ச்சுனன் தான் திருடிய நகை, பணத்தை தனது மனைவி அன்பரசியிடம் கொடுத்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி நகை, பணம் குறித்து கணவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நசீமா வீட்டில் திருடியதாக தெரிவித்தார்.

இதையடுத்து கணவர் கொடுத்த 22 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை நசீமாவின் வீட்டிற்கே சென்று அன்பரசி ஒப்படைத்தார். மேலும் தனது கணவர் குடிபோதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி கதறி அழுதார். அன்பரசியின் நேர்மையை கண்டு நெகிழ்ந்த நசீமா, போலீசில் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு

ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை.

டைம்ஸ் குழு

Leave a Comment