29.9 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

தமிழ்நாடு – புதுவை எல்லை சிக்கலால் ஏழை மாணவனுக்கு எட்டாக் கனியான மருத்துவப் படிப்பு

மணிகண்டன்
படக்குறிப்பு,வீட்டில் படிக்கும் மணிகண்டன்.

தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள பல ஊர்களில் பல விநோதங்கள் நடக்கும்.

ஒரு தெருவின் ஒரு புறம் தமிழ்நாடு, மறுபுறம் புதுச்சேரி என்பது போலவோ, வீட்டின் வாசல் தமிழ்நாடு தோட்டம் புதுச்சேரி என்பது போலவோ இந்த விந்தைகள் பல விதம். ஆனால், இந்த விந்தைகள் எல்லா நேரங்களிலும் வெறும் வேடிக்கையாக மட்டும் இருப்பதில்லை. சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய சிக்கலாகவும் முடியும்.

புராணசிங்கு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன் இப்படிப் பட்ட ஒரு எல்லைச் சிக்கலால், சட்டச் சிக்கலால் தமது வாழ்க்கையின் மிகப் பெரிய கனவான மருத்துவப் படிப்பை நூலிழையில் தவறவிட்டிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது இந்த ஊர். இதிலே சின்னஞ்சிறிய கூரை வீட்டில் குடியிருக்கிறது மணிகண்டன் குடும்பம்.

வீட்டுக்கு எதிரே 200 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இவர் படித்த பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி. வேதனையான விந்தை என்னவென்றால், இவரது வீடு இருப்பது தமிழ்நாட்டில். இவர் படித்த பள்ளி இருப்பது புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூனில். பள்ளியும் புதுச்சேரி அரசு நடத்தும் பள்ளிதான்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு சாலைக்கு அப்பால் உள்ள புதுச்சேரி மாநில அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார் மணிகண்டன்.

குடியிருப்பது தமிழ்நாடு என்றாலும், படித்தது புதுவை அரசுப் பள்ளி என்பதால், மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் தகுதி தேர்வில் (NEET) 500 மதிப்பெண்கள் பெற்ற இவர் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முயற்சித்தார்.

ஆனால், இவர் புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இவர் விண்ணப்பிக்க முடியாது அதிகாரிகள் கூறியதால், விண்ணப்பிக்காமல் விட்டுவிட்டதாக கூறுகிறார் இவர்.

தமிழ்நாட்டில் பிற மாநிலத்தை சேர்த்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் படித்தால், தமிழ்நாட்டின் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம். (ஆனால், புதுச்சேரியில் இப்படி 5 ஆண்டுகள் குடியிருந்த பிற மாநில மாணவர்கள் புதுச்சேரி மாநிலத்தின் மருத்துவம், பொறியியயல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயலாது. கலைக்கல்லூரிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.)

மணிகண்டன் வீடு இருப்பது தமிழ்நாட்டில் என்பதால் புதுச்சேரி யூனியன் பிரதேச ஒருங்கிணைத்த மாணவர் சேர்க்கை (CENTAC) மூலமும் இவர் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

பாரதிதாசன் அரசு பள்ளி

“எனது பள்ளி படிப்பை முடித்த பிறகு நீட் தேர்வு எழுதினேன். முதல் முயற்சியில், நீட் தேர்வில் 170 மதிப்பெண் எடுத்தேன். அதன்பிறகு மேலும் ஓர் ஆண்டு தொடர்ந்து படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வு எழுதி, 500 மதிப்பெண்கள் பெற்றேன்.

சரியாக நீட் தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த காரணத்தினால், உறுதியாக தேர்வாகி விடுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். பின்னர், நீட் தேர்வு விண்ணப்பிக்க முயற்சித்த போது, தகுதி சான்றிதழ் தொடர்பான சந்தேங்களை கேட்பதற்காக தேர்வுக் குழுவை தொடர்பு கொண்டேன். புதுச்சேரியில் பள்ளி படிப்பு படித்த காரணத்தால் இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு எனக்குப் பொருந்தாது என அவர்கள் தெரிவித்தனர்,” என்கிறார் மணிகண்டன்.

மணிகண்டன்
படக்குறிப்பு,மணிகண்டன்

விவசாயத் தொழிலாளி குடும்பத்தை சேர்த்த மாணவன் மணிகண்டன், பள்ளியிலேயே சிறப்பாக படிக்க கூடிய மாணவர். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மணிகண்டனின் கனவாக இருந்தது என்கிறார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம்.

ஸ்ரீராம்
படக்குறிப்பு,ஆசிரியர் ஸ்ரீராம்

“தமிழ்நாடு புதுச்சேரி எல்லைப் பகுதியில் பெரும்பாலான மக்கள், இதுபோன்று எல்லைகளில் இருக்கக்கூடிய புதுச்சேரி பள்ளிகளில்தான் படித்து வருகின்றனர். தமிழ்நாட்டுப் பள்ளிகள் தங்கள் வீட்டில் இருந்து தொலைவில் இருப்பதும், போக்குவரத்து வசதி இல்லாமல் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கிறது,” என்கிறார் ஸ்ரீராம்.

“இது போன்ற மாணவர்கள் எல்லை சிக்கல்களால் பாதிக்கப்படாத நிலை உருவாக வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு, கோரிக்கை,” என்கிறார் அவர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் கப்ருஸ்தானியில் (மையவாடி) சிமெண்ட் பாதை அமைக்கபடுகிறது

மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யா வல் மத்ரஸா(பட்டினத்தார் தெரு) மேல் தளம் விஸ்தரிப்பு திறப்பு விழா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.

Leave a Comment