27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: உயிரைப் பறிக்கக் காத்திருக்கும் கூரிய இரும்புக் கம்பிகள், சிதைந்த சாலை, மின்மாற்றியடியில் தேங்கும் மழைநீர்! பொதுமக்கள் அலறல்!

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட மரைக்காயர் தெரு மற்றும் அதன் விரிவாக்கப் பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும், பாதசாரிகளும், பொதுமக்களும் கடும் அச்சத்தின் பிடியில் பயணிக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அப்பட்டமான அலட்சியப் போக்கால், எந்த நேரத்திலும் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பைப்லைன் அமைப்பதற்காக மரைக்காயர் தெரு பகுதி சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு உடைக்கப்பட்டன. பல நாட்கள் கழித்து, ஒரு பகுதிகளில் மட்டும் சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, அதில் ஜல்லிக்கற்கள் மட்டும் பரப்பப்பட்டுள்ளன. இதனால் சாலை முழுவதும் கரடுமுரடாகவும், சிதைந்தும் காட்சியளிக்கிறது.

மேலும், பக்கவாட்டுச் சாக்கடை (வடிகால் வாய்க்கால்) அமைப்பதற்காக அந்த தெரு முழுவதும் நட்டு வைக்கப்பட்டுள்ள இரும்பு கூர்மையான கம்பி அப்பகுதி மக்களுக்குச் பெரும் அச்சுறுத்தல் ஆக மாறியுள்ளன. இந்த மோசமான சாலையில் செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள் அல்லது வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தால், இந்தக் கூர்மையான இரும்புக் கம்பிகள் உடலைக் குத்திப் பாய்ந்து உயிருக்கே பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

அதே மரைக்காயர் தெரு விரிவாக்கப் பகுதியில் பெய்த மழையினால் தண்ணீர் வடிய வழியின்றி சாலை முழுவதும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்தத் தேங்குநீரின் மிக அருகிலேயே மின்வாரியத்தின் மின்மாற்றியும் (Transformer), மின்கம்பங்களும் அமைந்துள்ளன. தேங்கியுள்ள நீரில் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டால், பேரழிவும் உயிர்ச்சேதமும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இன்னொரு பகுதியில், குடிநீர் குழாய்க்காகத் தோண்டப்பட்ட பாதை துரிதமாகச் சீரமைக்கப்படாததால், சிதலமடைந்த இந்தச் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தினமும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல மணி நேரம் தொடர் மின்தடை ஏற்படுகிறது. போதிய தெருவிளக்கு வெளிச்சமும் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தச் சிதைந்த சாலைகள், நீட்டிக்கொண்டிருக்கும் கூர்மையான கம்பிகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரைக் கடந்து செல்வது பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கொடூரமான சவாலாகவும் மரணப் பயத்தை ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.

தினமும் பீதியிலேயே பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதால், “பள்ளி மாணவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டால், அதற்கு கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்குமா?” என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கோபத்துடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, உடனடியாகச் சாலைப் பணிகளையும் சாக்கடைப் பணிகளையும் விரைந்து முடித்து, மின்மாற்றி அருகே தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த அவசரப் பிரச்சினை தொடர்பான செய்தி, கவனத்திற்கும் உடனடி நடவடிக்கைக்கும்
1. தமிழ்நாடு அரசுக்கும்
2. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 27-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பாரம்பரிய கண்காட்சி வீடியோ தொகுப்பு.. அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ கோப்பு..

கோட்டக்குப்பதில் சாலையில் சென்ற மாட்டின் மீது பைக் மோதி வாலிபர் பலி

டைம்ஸ் குழு

Leave a Comment