கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈகைத் திருநாள் (நோன்பு பெருநாள்) இன்று (21/03/2026) மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, பெருநாள் தொழுகைக்காக இன்று காலை 6:45 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகே ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அங்கிருந்து அவர்கள் தக்பீர் முழக்கங்களை எழுப்பியவாறு, ஈத்கா மைதானத்தை நோக்கிச் சென்றனர்.
இதில், மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு (பயான்) ஆற்றினார். தனது உரையில், “நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல், தீய பழக்கங்களில் இருந்து விலகி இருத்தல் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல்” உள்ளிட்ட கருத்துகளை அவர் ஆழமாக வலியுறுத்திப் பேசினார். தொடர்ந்து, காலை 7:30 மணிக்கு ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர், உலக அமைதி நிலவவும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும், சமுதாயத்தில் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஓங்கவும் வேண்டி சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டது.
தொழுகை நிறைவடைந்ததும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, தங்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.

































