29.9 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள!

கொரானா கொதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரானா நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

நோய்த் தொற்றினால் அனைத்தும் மேற்கொண்டு முன்னேறாமல் அப்படியே நிற்கிறது.

அதன் தாக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு அறிவித்த ஒழுங்கு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றியும், பின்பற்றாமலும் இருப்பதினால் தினந்தோறும் இந்தியாவில் ஒரு நாள் தொற்று 50 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.

நமது தமிழ்நாட்டில் அதன் தாக்கம் சமீபமாக ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தை சராசரியாக கொண்டுள்ளது. நாம் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும், இந்த ஊரில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கிறார்கள் என்று அந்த செய்திகளை அன்னியமாக கடந்து கடந்து வந்தோம்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு தொற்றினால் நமது ஊர் அரசு நடவடிக்கைகளாலும் மக்களின் பதட்டத்தினாலும் அல்லோகலப்பட்டது.

நாட்கள் செல்லச் செல்ல மக்களிடையே காணப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக அச்சத்தின் காரணமாகவும் அரசு நடவடிக்கை காரணமாகவும், நமது ஊரில் கொரானா தொற்று இல்லாத நிலையில் இருந்தோம்.

ஆனால் தற்பொழுது //கொரானாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்// என்ற கூற்றுக்கு ஏற்ப நாம் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல், நமக்கு “வராது நம் அருகில் இருக்காது” என்ற அலட்சியத்தினால், இன்று நமது அருகில் உள்ள புதுச்சேரியில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை சராசரியாக 400 கடக்கிறது. அதன் தாக்கமாக கோட்டகுப்பத்தில் பல பேர்களுக்கு அறிந்தும் அறியாமல் தொற்று இருந்து கொண்டு இருக்கிறது.

இதை நாம் இங்கு சொல்லக் காரணம் நம்மில் அனைவருக்கும் இதுவரையில் பரிசோதனை செய்யப்படவில்லை. கொரானா நோயினாலோ அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தாங்களாகவே சென்று பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்து கொண்டதில் அவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர்களுக்கு கொரானா தொற்று இருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

சில சகோதரர்கள் சந்தேகத்தின் பேரில் தங்களைத் தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதில், அதில் தங்களுக்கு கொரானா தொற்று உள்ளது என்ற பரிசோதனை முடிவுகள் கிடைத்ததால் அவர்களும் அவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டாரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் முழுமையாக உணர வேண்டும்.

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு தேர்தல் முடிவினை அறிவிப்பது போல இந்த ஊரில் எத்தனை பேருக்கு என்று தினம் தினம் செய்தி அறிவிப்பு வருகிறது. நாம் போற போக்கில் கண்டும் கேட்டும் கடந்து சென்ற நிலையில், இன்று நமதூரில் நமது அருகிலேயே நமக்கு வேண்டப்பட்டவருக்கு, நமது சகோதரர்களுகோ நமது நண்பருக்கோ தொற்று உள்ளது என்பதை அறியும்போது நாம் நம்முடைய செயல்பாட்டில் மிகுந்த அலட்சியமாக இருப்பதையே காட்டுகிறது.

தேவையில்லாமல் வெளியேறுவதையும். முகக்கவசம் இல்லாமல் பாதுகாப்பு வளையம் இல்லாமல் சென்று வருவதும் இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.

இணை நோயின் காரணமாக மருத்துவம் பார்க்கச் சென்றாலும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் இணை நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் தனிமைப்படுத்தப்படுவது, தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சம்மந்தப்பட்டவர்கள் மன உளைச்சல் அடைந்து அதனால் சில மரணங்கள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம்.

நமக்கு நோய் தொற்று ஏற்பட்டால் நம்மோடு முடிகின்ற விஷயம் இல்லை. நமது பிள்ளைகள், நமது மனைவி, நமது சகோதரர்கள், நமது தாய் தந்தையர்கள், சுற்றத்தார்கள், அக்கம்பக்கத்தினர் போன்ற பலருக்கும் அதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள நிலையில் நம்மோடு முடியக்கூடிய விசயம் இல்லாததால் நாம் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நோய்த் தொற்றின் காரணமாக பல விதமான விழிப்புணர்வு காணொளிகள் அறிவிப்புகள் செய்யப்பட்டும் அந்த அறிவிப்புகளை எல்லாம் நாம் அலட்சியம் செய்து, இன்று நமது பகுதியில் பல சகோதரர்கள் நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறியமுடிகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் நமதூரில் அதிகப்படியான நோய் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு நாம் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே நம்முடைய செயல்பாடுகளை நம்முடைய அன்றாட நடவடிக்கைகளை சரியாக திட்டமிட்டு, நம்முடைய வியாபாரங்களை தொழில்களை மிகுந்த திட்டமிடலுடன் செயல்பட்டு, நமது பகுதியில் சமீபத்தில் பரவி வரும் நோய்தொற்றை ஒழிக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்.

இது சம்பந்தமாக நமது இணையதளத்தில் பலவிதமான அறிவிப்புகளை நாம் செய்துள்ளோம். ஆனால் தற்போது சூழ்நிலையில் எந்த விதமான அறிவிப்புகக்கும் மக்கள் செவி சாய்க்காமல் தான்தோன்றித்தனமாக அலட்சியமாக இருப்பதை கண்டு வருகிறோம்.

நமது ஊரிலேயே நாம் இரண்டு மரணங்களை கண்டும் விழிப்புணர்வு பெறாமலேயே இருக்கிறோம்.

இனி வரும் நாட்களில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் நாம், நமது நகரை முன்னுதாரணமான நகரமாக மாற்றுவோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

துபாயில் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடி புனரமைப்பு.

டைம்ஸ் குழு

மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யா வல் மத்ரஸா(பட்டினத்தார் தெரு) மேல் தளம் விஸ்தரிப்பு திறப்பு விழா

Leave a Comment