கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கொசுத் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியாமல் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சமீபத்திய தட்பவெப்ப நிலை மாற்றம், திறந்தவெளி சாக்கடைகள் மற்றும் காலி மனைகளில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதாக கூறப்படுகிறது. இதனால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளிலுமே கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சி நிர்வாகம் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஓரிரு வார்டுகளில் மட்டுமல்லாமல், நகராட்சியின் 27 வார்டுகளிலும் விடுபடாமல் சுழற்சி முறையில் உடனடியாகக் கொசு மருந்து தெளிக்கவும், புகை மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


