கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று(25/11/2025) பர்கத் நகர் 6-வது கிராஸ் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, இரண்டு தெரு நாய்கள் கடித்துக் குதறின. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோட்டக்குப்பம் பகுதிகளில், இரவிலும் பகலிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைவதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், குறிப்பாகச் சிறுவர்களும், முதியோரும் வெளியே செல்லப் பயப்படும் நிலை நிலவுகிறது. தற்போது ஆட்டைக் கடித்துக் குதறிய சம்பவம், தெரு நாய்களின் அச்சுறுத்தலை மீண்டும் உறுதி செய்துள்ளது.
தினந்தினம் உயர்ந்து வரும் தெரு நாய்களின் அச்சுறுத்தலைத் தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனவே, கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பர்கத் நகர் மற்றும் கோட்டக்குப்பம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




