கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கோரித்தோப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலைக்கு பதிலாக, இதற்கு முன் இருந்த சாலையே பரவாயில்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கோரித்தோப்பு பகுதியில் சாலைகள் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்டன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அப்பகுதி மக்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு “உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில்” சாலைகள் சீரமைக்க கோரி மனு அளித்தனர்.
அதன்பின் 18 மாதங்கள் கழித்து, கடந்த மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சாலைப் பணிகள் முடிந்த மறுநாளே பெய்த மழையால், சாலையின் முன் பகுதி குளம் போல் காட்சியளித்தன. இதுகுறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சாலைகள் மீது சிப்ஸ் ஜெல்லி கற்கள் போட்டு தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டது.
இருப்பினும், சாலைகள் முறையாக அமைக்கப்படாததால் மழை நீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் தேங்கி நின்ற தண்ணீரில் வழுக்கி விழுந்ததில் ஒரு பெண் காயமடைந்தார். இந்த தண்ணீர் தேக்கத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சுகாதாரத்துறையினர் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வரும் நிலையில், பொது இடத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் டெங்கு போன்ற நோய்களை பரப்பும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகவே, கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், சாலைகளை முறையாக சீரமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரித்தோப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



