பாலஸ்தீனில் தொடர்ந்து நிகழும் இன அழிப்பு யுத்தத்தை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், பாலஸ்தீனை உடனடியாகத் தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அங்கீகரிக்க வலியுறுத்தியும், கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இன்று (03/10/2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் சரியாக 1:30 மணியளவில் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மௌலானா மௌலவி ஹாபிஸ் சித்திக் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். அனைத்துப் பள்ளிவாசல்களின் முத்தவளிகள், அனைத்துக் கட்சி மற்றும் இயக்க நிர்வாகிகள், வியாபாரிகள் – வர்த்தக சங்க நிர்வாகிகள், ஆட்டோ மற்றும் மினிடோர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் ரப்பானி மற்றும் மௌலானா மௌலவி ஹாபிஸ் ஆரிப் அலி ரப்பானி ஆகியோர் கண்டன உரைகளை ஆற்றினர். அபுதாகிர் மற்றும் அஷ்ரப் அலி ஆகியோர் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பாலஸ்தீனில் நடக்கும் போரைக் கண்டித்தும், ஐ.நா. சபை பாலஸ்தீனை அங்கீகரிக்க வலியுறுத்தியும் தங்களது கண்டனங்களைப் பலமாகப் பதிவு செய்தனர்.















