சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பசுமையை அதிகரிக்கும் நோக்கிலும், கோட்டக்குப்பத்தில் பி.எம். பவுண்டேஷன் சார்பில் பொதுமக்களுக்கு 1000 விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவு வளைவு அருகே, இன்று (ஜூலை 25, வெள்ளிக்கிழமை) மதியம் 1:30 மணியளவில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், மாட்டுச் சாணம், செம்மண், களிமண் உள்ளிட்ட இயற்கை உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. இந்த பந்துகளில் அரசன், புளி, வேம்பு, வாகை, சுபாபுல் போன்ற மரங்களின் விதைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த விதைப்பந்துகளைப் பெறும் பொதுமக்கள், அவற்றை ஏரி, குளம், குட்டை மற்றும் கண்மாய் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் வீசிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலம், மழைக்காலங்களில் விதைகள் எளிதில் முளைத்து மரங்களாக வளரும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த முக்கிய விழிப்புணர்வாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில், பி.எம். பவுண்டேஷன் மேலாண்மைக் குழு அமைப்பாளர் பத்ருதீன், செயலாளர் கமருதீன், மக்கள் தொடர்பு அலுவலர் முகமது அலி, சட்ட ஆலோசகர்கள் அப்துல் சமது, பாலமுருகன் மற்றும் வசந்தம் சிட் முஹம்மது வசீம், பி.எம். அகாடமி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
















