தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என பல லட்சம் பேர் வேலைக்காகவும், சொந்த தொழிலுக்காகவும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவ்வாறு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், பல புதிய முயற்சிகளையும் திட்டங்களையும் தமிழக அரசாங்கத்தின் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத் துறையானது (NRT) அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பிற்காக அயல்நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்பவர்கள், மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள், மற்றும் பெண்களிடம், தமிழ்நாட்டில் உள்ள போலி முகவர்களால் ஏமாற்றப்படுவதை இந்த திட்டம் தடுக்கும்.
அதன்படி, இந்த சிறப்பு முகாம் நாளை (ஏப்ரல் 26, 2025) கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் உள்ள சவுக்கதுல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற உள்ளது. முகாம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்த அடையாள அட்டையை பெற விரும்புவோர், பாஸ்போர்ட், அந்தந்த நாட்டு அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பதிவு கட்டணமாக 200 ரூபாய் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் இந்த நலத்திட்டத்தின் மூலம், அடையாள அட்டை வைத்திருக்கும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு காப்பீட்டு திட்டம், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
அதன்படி, அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் ரூ.5 லட்சம் அல்லது ரூ.10 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகையை சந்தா முறையில் தேர்வு செய்து பயனடையலாம். மேலும், தீவிர மற்றும் தொடர் சிகிச்சைக்கு தேவைப்படும் நோய்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சந்தா முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
அயல்நாட்டில் வசிக்கும் தமிழர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித்தொகையும், திருமண வயது பூர்த்தியடைந்த மகன் மற்றும் மகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.
எனவே, இந்த சிறப்பு முகாமில் தகுதியுள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.