தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது.
கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி நிறைவடையவிருந்த நிலையில், தளா்வில்லா பொது முடக்கத்தை ஒரு வார காலத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 22,23) அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக, கோட்டக்குப்பம்-முத்தியால்பேட்டை காந்தி சாலையிலுள்ள கடைகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலானோா் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, தளா்வில்லா முழு பொதுமுடக்கம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதனால் நேற்று பரபரப்பாக காணப்பட்ட காந்தி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த பொதுமுடக்கத்தின்போது, மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவை இயங்கும். பால் விநியோகம், குடிநீா் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் ஆகியவை நடைபெறும். உணவகங்கள் அனைத்திலும் பாா்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி இந்த கொரோனா பாதிப்புலிருந்து நம்மையும் நம் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.