தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சார்பாக வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து “மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்“, விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் எதிரில் இன்று 12/11/2024 மாவட்ட தலைவர் சல்மான் பார்சி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முகமது யாசீர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தனது கண்டன உரையில் பேசியதாவது:
வக்ஃப் வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வக்ஃப் வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது சங்க பரிவாரங்களின் முஸ்லீம் வெறுப்பு செயல்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.
இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசிச பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன. அவற்றை அபகரித்து அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்கிறது.
வக்ஃப் வாரிய உறுப்பினராக இரண்டு முஸ்லீம் அல்லாதவரை நியமிக்கக் கூடிய நடைமுறை, பாஜக ஆளும் மாநிலங்களில் வக்ஃப் வாரியத்தை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்கப் பயன்படுத்தப்படும். மேலும் இதே நடைமுறை கோயில் மற்றும் சர்ச் நிர்வாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமா?
இந்த மசோதாவானது வக்ஃப் வாரியத்தின் வருமானத்தை குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தும், ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளை செய்யும் நடைமுறை.
சர்ச்சைக்குரிய நிலங்களுக்கு தீர்வுகாணும் அதிகாரம் கலெக்டர் உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வக்ஃப் வாரிய தீர்ப்பாயத்தை (Tribunal) நீர்த்துப்போகச் செய்துள்ளனர். இத்தனை குளறுபடிகளோடு வந்துள்ள இந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆளும் ஒன்றிய அரசு கட்டாயம் திரும்பப் பெற்றே
ஆக வேண்டும், அதுவரை எமது போரட்டங்கள் கடும் வீரியத்துடன் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் முஹம்மது இப்ராஹிம் நன்றி கூறி நிறைவு செய்தார்.