தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 3, 2025) காணொலிக் காட்சி வாயிலாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட, 18-வது வார்டில் அமைந்துள்ள புதிய நகர்ப்புற நலவாழ்வு மையமும் முதலமைச்சரால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
கோட்டக்குப்பம் 18-வது வார்டு, ஷாதி மஹால் தெருவில் சேதமடைந்த தாய் சேய் நல மையக் கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, 15-வது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 12, 2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பல மாதங்களாக இந்த மையம் திறப்பு விழாவுக்காகக் காத்திருந்தது. தற்போது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பத்தின் பிரதான பகுதியாகக் கருதப்படும் ஷாதி மஹால் தெருவில் அமைந்திருக்கும் இந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், ஒரு மருத்துவர், மருந்தாளுநர், செவிலியர் மற்றும் உதவியாளர் என முழுமையான மருத்துவக் குழு நியமிக்கப்படவுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திறப்பு விழா நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், நகர்மன்றத் தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஜீனத் பிவி முபாரக், நகராட்சி ஆணையாளர் புகேந்திரி, நகர்மன்ற உறுப்பினர்கள், முத்தவல்லிகள், பஞ்சாயத்தார்கள், நகராட்சி அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
















