கோட்டக்குப்பம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் இன்று (13/11/2024) மனு அளிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அலுவலக கட்டிடம், துணை மின்நிலையம், அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை, சார் பதிவாளர் அலுவலகம், புதைவிட மின் விநியோகம், அரசு நவீன நூலகம், மின்தகனமையம், நவீன பொதுக் கழிப்பிடம், அரசு இ-சேவை மையம், பாதாள கழிவுநீர் அமைப்பு, ஆவின் பால் நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நகராட்சி மேற்கொண்ட பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர், இரண்டு நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை தயார் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். நகராட்சி தலைவர், மக்கள் நலக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.