கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு அருகிலுள்ள அரபாத் தெருவில், தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை விரைந்து சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்பது குறித்து கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியோர் சுகாதாரச் சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பலரும் முடங்கியுள்ளனர். கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களை சீரமைக்க கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இதேபோல் தேங்கியுள்ள கழிவுநீர்களால் மேலும் புதிய அபாயகரமான நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர்.